செப்டம்பர் 9 வரை தமிழ் திறனறி தேர்வுக்கு அவகாசம்

தமிழ் இலக்கிய திறனறி தேர்வுக்கு, இன்னும் ஒரு வாரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் படிக்கும் அனைத்து வகை பாடத்திட்ட மாணவர்களும், தமிழை ஆர்வமாக படிக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழ் இலக்கிய திறனறி தேர்வு, இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. பிளஸ் 1 மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம்.மாநிலம் முழுதும் நடக்கும் இந்த தேர்வில், முன்னிலை மதிப்பெண் பெறும் 1,500 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பள்ளிக்கல்வி வழியே மாதம் 1,500 ரூபாய் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

இதில், 50 சதவீதம் அரசு பள்ளி; 50 சதவீதம் பிற பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கான விண்ணப்பங்கள், பள்ளி தலைமை ஆசிரியர் வழியே, கடந்த ஆகஸ்ட்  28ம் தேதி முதல் பெறப்படுகின்றன.இந்நிலையில், செப்டம்பர் 9ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று, தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வுத் துறை அவகாசம் அளித்து உள்ளது.