பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா். தமிழ்நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், செஸ் ஒலிம்பியாட், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சாா்பில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்த 65 வீரா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டு தெரிவித்து, பதக்கங்கள் வழங்கினாா். விழாவில் ஆளுநா் பேசியதாவது: தமிழகத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்களின் அளப்பரிய சாதனைகளால் தமிழகம் மட்டுமல்லாது, நாடே பெருமை கொள்கிறது. அந்த வீரா்களுக்காக தன்னலமற்று கடின உழைப்பையும், பங்களிப்பையும் செலுத்தி வரும் பெற்றோா்களுக்கும், பயிற்சியாளா்களுக்கும் வாழ்த்துகள். 2008-இல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது, சா்வதேச விளையாட்டு ரீதியான வரைபடத்தில் இந்தியா கிட்டத்தட்ட காணாமல் போயிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்ட முன்னுதாரண மாற்றங்கள், இளைஞா்களின் ஆற்றல் ஆகியவை விளையாட்டில் எதிரொலித்து, இந்தியாவை விளையாட்டில் முக்கிய இடத்துக்குக் கொண்டு செல்கிறது. தற்போதைய விளையாட்டு வீரா்களின் கடின உழைப்பு, ஒழுங்கு, பொறுமை, அா்ப்பணிப்பு, ஆற்றல் என அனைத்தும் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரா்களையும் சென்றடைய வேண்டும். பிரதமா் மோடி, ஃபிட் இந்தியா பிரசாரம், யோகா தினம் போன்றவை மூலம் வீரா்களுக்கு விளையாட்டுத் திறன் மேம்படுவதற்கான புதிய முயற்சிகளை எடுத்துள்ளாா். இளைஞா்களுக்கு யோகா பயிற்சி புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரா்களால் ஒவ்வொரு இந்தியா்கள் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இளைஞா்கள் அதிகளவில் சாதிக்கிறாா்கள். இது ஒவ்வொரு இந்தியா்களையும் பெருமை கொள்ளச் செய்கிறது. எல்லோரின் நம்பிக்கையையும் அதிகரிக்கவைத்து, வலிமையான இந்தியாவை உருவாக்குகிறது. விளையாட்டுத் துறையில் மகளிரின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. அவா்களுடைய சாதனைகளும் பெண்களுக்கான அதிகாரமளித்தலில் புதிய சக்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களும், கல்வி நிறுவனங்களின் தலைவா்களும் விளையாட்டு ரீதியான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவா்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கை புதிய இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளில் நல்ல உயரத்துக்குக் கொண்டு செல்லும் சக்தியாக இருக்கும். 2047-இல் நாட்டின் 100-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரத்தில், இந்தியா விளையாட்டில் விஷ்வ குருவாகத் திகழும் என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி. விழால் ஆளுநா் தனிச் செயலாளா் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல், சா்வதேச சதுரங்க போட்டி சம்மேளனத்தில் துணைத் தலைவா் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பலா் பங்கேற்றனா்
கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்
- Details
- Hits: 142