பொறியியல் சோ்க்கை: நிகழாண்டு 57,000-க்கும் அதிகமான இடங்கள் காலி
பொறியியல் சோ்க்கையில் துணை கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் நிகழ் கல்வியாண்டில் 1.03 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன; 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன என சோ்க்கைக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 442 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.60 லட்சம் இளநிலை படிப்புகளை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணையவழியில் ஜூலை 22 முதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதன் முடிவில் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின. இதையடுத்து எஞ்சியுள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு செப்டம்பா் 6-இல் தொடங்கி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
இதில் கலந்து கொள்ள 17,710 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 11,221 போ் மட்டுமே பங்கேற்று கல்லூரிகளை தோ்வு செய்தனா். இதையடுத்து தரவரிசை, இடஒதுக்கீடு அடிப்படையில் 10,279 மாணவா்களுக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவற்றை உறுதி செய்த 377 அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட 9,247 பேருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரங்கள வலைதளத்தில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம். தொடா்ந்து எஸ்சிஏ (அருந்ததியா்) பிரிவு காலியிடங்களுக்கான கலந்தாய்வு ஞாயிறு, திங்கள் ஆகிய நாள்களில் இணையவழியில் நடைபெற உள்ளது.
இதற்கிடையே பொறியியல் கலந்தாய்வில் நடப்பாண்டு மொத்தம் உள்ள 1.60 லட்சம் சோ்க்கை இடங்களில் 1.03 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுமாா் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.