இரண்டாம் உலக போரின் போது அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசி தாக்கியது. இதனால் பல லட்சகணக்கான மக்கள் இறந்தனர். இலட்சகணக்கானோர் அணுக்கதிர்வீச்சின் காரணமாக பலவித நோய்களுக்கு உட்பட்டனர்.
அந்த இலட்சக்கணக்கானவர்களில் ஒருத்தி தான் ஜப்பானின் ஹிரோஷிமாவைச் சேர்ந்த இரண்டு வயது நிரம்பிய சிறுமி சடகோ ஸசாகி. பாதிப்பின் தீவிரத்தை அறியாத ஸசாகி மகிழ்ச்சியாகவே தனது பள்ளி வாழ்கையை அனுபவித்தாள். வருடங்கள் ஓடியதே தெரியாத ஸசாகி ஏழாம் வகுப்பு படித்துகொண்டிருந்தாள். பள்ளியின் சிறந்த தடகள வீராங்கணையில் ஒருத்தியாக விளங்கிய ஸசாகியின் கனவு ‘’ஒரு நல்ல உடற்பயிற்சி ஆசிரியராக வேண்டும்’’என்பதாக இருந்தது .
திடீரென ஒருநாள் பள்ளியில் அவள் மயங்கி விழவே, அவளை மருத்துவமனையில் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ‘’லுயுகேமியா’’ என்ற இரத்தபுற்றுநோயால் பாதிக்கபட்டுள்ளதை கூறினார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இறந்துவிடுவார்கள். அதுவரையில் மகிழ்ச்சியுடன் தன் வாழ்வில் இருந்த ஸசாகி தனக்கு வந்திருக்கும் நோயைப் பற்றி நினைத்து மிகவும் பயந்து அழுதாள்.
மருத்துவமனையில் நாட்கள் கழிந்த போது, ஒரு நாள் நலம் விசாரிக்க ஸசாகியின் நெருங்கிய தோழி ஒருத்தி தன் கைகளில் சில காகித கொக்குகளை கொண்டுவந்தாள். பல வருடங்களாக ஜப்பானில் கொக்குகள் புனிதத்தின் அடையாளமாக விளங்குகின்றன. நோயுற்ற ஒருவர்,1000 காகித கொக்குகளை உருவாக்கினால் அவர் உடல்நலம் பெறுவார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகவே நீ 1000 காகித கொக்குகளை உருவாக்கு என அன்புக் கட்டளை இட்டுச் சென்றாள்.ஸசாகி காகித கொக்குகளை உருவாக்க முடிவு செய்தாள். நோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது கூட அவள் காகித கொக்குகளைச் செய்வதில் விடாமுயற்சியுடன் இருந்தாள். இதில் ஒரு கட்டத்தில் அந்தக் காகிதக் கொக்குகளைச் செய்வதற்கு காகிதங்கள் தீர்ந்து விடுகின்றன. இதனைத் தொடர்ந்து தனக்கு மருந்துகள் எழுதப்பட்ட மருந்துச்சீட்டில் காகித கொக்குகளைச் செய்யத் தொடங்கிறாள் ஸசாகி.
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காகித கொக்குகளை உற்சாகமாக உருவாக்கிய போது ஓரளவு உடல் நலம் பெற்றாள். ஆகவே மருத்துவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர். வீட்டுக்குச் சென்ற ஒரு வாரத்தின் முடிவில் மீண்டும் நோய்வாய்பட்டாள். முன்பை விட மிக அதிகமான வலியும், வேதனையும் கூடியபோது கூட நம்பிக்கையை தளரவிடாமல் அவள் உருவாக்கிய காகித கொக்குகள் மொத்தம் 644.
அவள் இறப்புக்கு பின் அவளுடைய நண்பர்கள் மீதமுள்ள காகித கொக்குகளை செய்து முடித்து அவளுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்றினர். ஸசாகியின் இறப்புக்குப் பின் மூன்று வருடங்களுக்கு பிறகு 1958 மே 5-ம் தேதி ஹிரோஷிமா அமைதி பூங்காவில் அவளுக்கென நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது. அவளின் நினைவு சின்னம் இன்றளவும், நமக்கு உலகின் அமைதியைக் கூறி கொண்டே இருக்கிறது.இறக்கும் தருவாயில் கூட ஸசாகி தன்னுடைய விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் கைவிடவில்லை. உண்மையில் நம் அனைவருக்கும் வாழ்வில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் தவிர்க்க இயலா வருத்தங்கள்,பிரச்சனைகள் இருக்கும். அனைத்தையும் இழந்தாலும் நம் வாழ்வில் நாம் இழக்கக்கூடாது விடாமுயற்சி, தன்னம்பிக்கை மட்டும்தான். அனைத்தையும் இழந்தாலும் நம்மிடம் உயிர் உள்ளது.