ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் சலவை தொழிலாளி, இன்னொருவர் மண்பானைகள் செய்யும் குயவர். இரண்டு பேருமே அரசரிடம் வேலை பார்த்து வந்தனர்.

ஒரு நாள் இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் குறைகளை தாங்களே தீர்த்துக்  கொள்ளாமல் அரசரிடம் ஒருவர் பற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டு இருந்தனர்.

மண்பானை செய்யும் குயவர், சலவை தொழிலாளியை அரசரிடம் வசமாக சிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி அரசரைப் பார்த்து, “அரசே, நமது பட்டத்து யானை கருப்பாக இருக்கிறது. யானையை சலவை தொழிலாளியிடம் கொடுத்து வெளுக்க செய்ய சொல்லுங்கள்” என்றார். அரசர் மிகப்பெரிய முட்டாளாவார். அவர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் சலவை தொழிலாளியை கூப்பிட்டு யானையை வெளுத்து வரும்படி கூறினார். உடனே சலவை தொழிலாளி அரசரைப் பார்த்து, “அரசே, யானையை வெளுத்து விடலாம் யானையை வேக வைக்கும் அளவிற்கு பெரிய பானை ஒன்றை குயவரை செய்து தர சொல்லுங்கள்” என்றார்.அரசர் குயவரை கூப்பிட்டு, “யானையை வேக வைக்க பெரிய பானையை செய்து கொடு” என்று ஆணையிட்டார். குயவர் திரு திரு என விழித்தார்.

இறுதியில் இருவரும் சந்தித்தனர். உன் மேல் நானும், என்மேல் நீயும் குறை கூறி மாட்டிக் கொண்டோம். இதனால் நம் இருவருக்குமே துன்பம். இனிமேல் இதுபோல் நடக்கக்கூடாது. நம் தவறுகளை நாமே திருத்திக் கொள்வோம் என்றார்கள். இருவரும் முன்பு போலவே நண்பர்கள் ஆனார்கள். 

நீதி : ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வம்பில் மாட்டிக்கொண்டு விழிப்பதை விட, ஒருவர் மீது மற்றொருவர் குறை கூறுவதை விட்டு அவரவர் குறையை அவரவர் திருத்திக் கொண்டு வாழ்வது சிறந்ததாகும்.