கேட்’ தேர்வு பிப். 3-ம் தேதி தொடங்குகிறது. தேர்வு நடைபெறும் நாட்களில் வேறு தேர்வுகள் நடைபெறாதவாறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.
பொறியியல் படிப்பை முடிக்கும் பட்டதாரி மாணவ, மாணவிகளுக்காக தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு குறித்த அறிவிப்பை பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
2024-ல் நடைபெறவுள்ள கேட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் 30-ம் தேதி முதல் செப். 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
கணினி வாயிலாக நடைபெறும் இத்தேர்வானது ஒவ்வொரு நாளும் காலை மற்றும் பிற்பகலில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐஐஎஸ்சி, 7 ஐஐடி-க்களுடன் இணைந்து நடத்த உள்ளது. தேர்வு முடிவு அடுத்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண் அட்டைகளை அதே மாதம் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேட் தேர்வு நடைபெறும் நாட்களில், வேறு எந்த தேர்வுகளும் நடைபெறாதபடி தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என ஏஐசிடிஇ தெரிவித்து உள்ளது.